A Tamil poem

முத்தொளிர் நல்லிசை வித்துவ ரத்தினம்
        மூத்தவர் போற்றிடும் மாமணியாம்
எத்திசையும் புகழ் பட்டம்மாளின் 
        ஏழிசை வாழ்வே மோஹனமாம்.
    
மோஹனமாய் ஒரு ராகமதில்வரும்
        மூண்டெழும் ஞானச்சுவை பலவாம்
செம்மை பெறுமிவர் செங்கலை வாழ்க்கையில்
        செம்பொன் மணிப் புகழ் ஏடதுவாம்.

எத்தனை எத்தனை ராகங்கள்-அதில்
        எத்தனை விதமாய் கற்பனைகள்
அத்தனையும் ஒரு கவி புனைந்தால்
        ஆகிடும் நல்லிசைப் பாயிரங்கள்.

தோயும் பாட்டில் தோன்றி எழும்-மனத்
        தூய உணர்ச்சிகள் ஆயிரமாம்
பாயும் பல்வகை பண்புகளாம்-அது
        பாரில் அவளை ஏற்றியதாம்.

பாடலிலே தெய்வ பக்தி எழும்-பாரதி
        பாணியிலே ஒருசக்தி எழும்-இசை
ஓடையிலே சுவை ஊறிவரும்-அதன்
        ஓசையிலே குயில் ஓங்கி எழும்.

ஓங்கியிவள் இசை பாடிடவே உருகும்
        உள்ளமதில் சுகம் துள்ளி எழும்
தேங்கிய தேன்கடல் தான்மடை தாண்டியே
        தெள்ளிசை நல்லிசை வெள்ளம் வரும்.

ஆசைமுகம் கலை நாட்டிய இன்முகம்
        ஆரமுதென்னவே பேசும் முகம்
பாசம் மிகுந்தவள் பட்டங்கள் சேர்த்தவள்
        பண்பின் இசைக்கடல் பட்டம் மாளே.

கார்மேகம் பொழி கருணை போல்
        கலந்து சுவரங்களுக் கணி செய்தாய்
பாரது வியக்கும் பல்லவிகள்
        பட்டம்மாள் அன்றியார் தருவார்..

கண்ணுக்குத் தெரியாத கடவுள் சிந்தும்
    கருணையிலே உருவாகி மெள்ள் இந்த
மண்ணுக்கு வந்துயர்ந்து வாழ்ந்த
    மனுஷியாம் பட்டம்மாள் வாழி! வாழி!

எண்ணுக்குள் அடங்காத இதயக்கூட்டம்
    இன்பமுடன் கேட்ட நல் இசையாலே
விண்ணுக்குள் விரியும் தத்துவமாய்
    விளங்கு புகழ் செறியும் தானே!

பாடும் பாட்டில் தேன் கலந்தாய்
      பாரதி கவிதைத் தென்றல் போல்
வாடும் பயிறும் செழிக்கும்நல்
        வண்ணமாய் அருவிபோல் இசை தந்தாய்.

மூர்த்திகள் மூவருக்கு விழா எடுத்தாலும்
        முந்து தமிழையே நீமுன் வைத்தாய்
கார்த்திகை திருநாள் அதுபோல் ஒளிர்
        ஜோதியாய் இசைத்தேன் வடித்தாய்.

சாதலை மாற்றும் மருந்தறியும்-ஒரு
        சக்திப் புரட்சியாய் இசை வடிப்பாள்
ஆதலால் இவள் ஒரு சஞ்ஜீவி,
        ”அமிர்தம்” இவளின் மறுபெயரோ?

புன்னகை மின்னும் தோற்றம்
        புகழிலும் பணியும் ஏற்றம்
இன்னிசைத் திறத்தினாலே 
        சபைகளை ஈர்க்கும் ஆற்றல்

தேன் ஊறும் கேணி எனத்
        தினம் ஊறும் இசை கேட்டோம்
பொன்னியின் வெள்ளம்போல் கரை புரளும்
        ‘பல்லவி’ வேறினி யார் தருவார்?

தேடும் இறைவன் முன்வந்தான் – உன்
        தூய இசையில் மனம் கனிந்தான்
நாடும் வீடும் போற்றும் நல்
        இசைப் பேரறிஞரே நீ என்றான்.

தென்னக  இசை வானின்
        செழும் வரலாற்று நூலில்
பொன்னேடு நீங்கள் தானே
        புகழே உங்களைப் போற்று கின்றேன்.
    

கவிஞர் சாத்தூர் G. S. கற்பகம்
கோபிச்செட்டிப்பாளையம்