என் பார்வையில் கலைவாணியின் குடும்பம்

டிகேபி – என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் டி.கே.பட்டம்மாள் பற்றி இங்கு நான் எழுத எத்தனித்தது, கடலில் நழுவ விட்ட காசைத் தேடுவது போல். இருந்தாலும் ஆசை யாரை விட்டது. அந்த குடும்பத்தோடு எனக்கு நெடுநாளய பழக்கம் உண்டு என்ற ஓர் நம்பிக்கையில் எழுதத் துணிந்து விட்டேன். அவரைப் பற்றி நான் நேரில் கண்ட பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்

டிகேபி என்ற பெரியதோர் ஆலமரம். அதன் நிழலில் தங்கி இளைப்பாறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என் பாக்கியம். நான் எப்பொழுது போனாலும் சிரித்த முகத்தோடு வரவேற்பார். டிகேபியின் வீடும் மகன் சிவகுமார் வீடும் அடுத்தடுத்து இருக்கும். இரண்டு வீட்டிற்கும் ஒரே மதில் சுவர் தான். சிவகுமார் வீட்டில் எது செய்தாலும் அது டிகேபி – அவர்களுக்கும் போகும். நான் அங்கு இருந்தால் நான் தான் கொண்டு கொடுப்பேன்.

மாமியாரும் மருமகளும்

மாலை வேளைகளில், அதுவும் மழை பெய்து ஓய்ந்திருக்கும் சமயம் சிவகுமார் வீட்டில் மருமகள் லலிதா பஜ்ஜி அல்லது போண்டா அல்லது வடை போடுவார். சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். அவற்றை நான் டிகேபி – அவர்களிடம் கொண்டு கொடுக்கும் சமயம், “இப்பத்தான் நினைத்தேன்” – பஜ்ஜி இருந்தால் நன்றாக இருக்குமென்று எப்படித் தெரிந்து கொண்டாள்? என்று மிகுந்த சந்தோஷத்தோடு வாங்கி உண்பார்.

பட்டம்மாள் அவர்கள் வீட்டில் இருந்தபடி நினைப்பது மருமகள் லலிதாவுக்கு எப்படித்தான் தெரியுமோ? ரொம்பவும் ஆச்சர்யமான விஷயமாக இருக்கும். எது செய்தாலும், செய்யும் போதே “அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்” – என்று சொல்லிக் கொண்டே செய்வார். கல்யாணம் செய்து கொடுத்ததில் இருந்து அவர்கள் கூட இருந்து பார்த்தவை என்பதால் மட்டும் இவை எல்லாம் சாத்தியமாகாது. அவர்களுக்குள் மாமியார் – மருமகள் என்ற உறவைத்தாண்டி, ஒரு பலமான அன்பின் பிணைப்பு இருந்திருக்க வேண்டும். தாய் மகள் உறவையும் தாண்டி ஒரு நேசம் இருந்தது ஆச்சர்யம் தான்.

புதிதான பாடல் ஒன்று கற்றுக் கொண்டால் மறக்காமல் இருக்க இவருக்கு எழுதித் தரவேண்டும். காயத்ரி (அவரின் பேத்தி) தான் எழுதித் தருவதாக சொன்னால் கூட வேண்டாம்மா. லலிதாவே எழுதி தரட்டும். அவளது கையெழுத்தே எனக்கு பழகிவிட்டது என்று மிகவும் நயமாக சொல்வார். உடனே மருமகள் பாடலை எழுதித்தர உட்கார்ந்து விடுவார். டிகேபி ஒன்று கேட்டால், என்ன வேலை இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டு பட்டம்மா அவர்களின் வேலையிலேயே முழுதும் மூழ்கிப் போவார். அதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். எங்கு செல்வதாக இருந்தாலும் லலிதா உடன் வர வேண்டும். கைபிடித்து அழைத்து போவதை யாராவது ஏற்றுக் கொண்டால் அவர் கண்கள் லலிதாவைத் தான் தேடும். எப்பொழுதும் லலிதா! லலிதா!! என்று ஸஹஸ்ரநாம அர்ச்சனை மாதிரி அவரின் வாயில் அவள் பெயர் ஒலிக்கும். இவர்களும் அம்மா! அம்மா!! என்று வாஞ்சையோடு இருப்பதைப் பார்க்க உறவு முறையைத் தாண்டி ஒரு நட்பு இருப்பதாகவே தெரியும். பல சமயங்களில் ஆண்டவனுக்கும் அடியாருக்கும் உள்ள நெருக்கம் போல் இருப்பது மிகவும் ஆச்சர்யம்.

பண்டிகைகள்

பண்டிகைகள் வந்துவிட்டால் தனது 75 வது வயதிலும் அந்த நாளுக்காக மிகவும் பிரயத்தனப்படுவார். தன் கையிலேயே அம்மனுக்கு எல்லா அலங்காரங்களையும் செய்வார். 2 தடவை நான் வரலஷ்மி விருதம் சமயம் சிவகுமார் வீட்டில் இருந்திருக்கிறேன். டிகேபி அவர்களின் பண்டிகைக்கால பிரயத்தனங்களை நேரில் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். குடும்ப ஸகிதமாக மகன், மருமகள், பேத்திகள் என்று கூடி ஒரு விழா போல் நடத்துவார். பூக்கள் போட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்வது கூட கலை நயத்தோடு இருக்கும். அர்ச்சனையின் போது அவரது சமஸ்க்ருத உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்கும். தன்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவராக இருந்தார். கீர்த்தனைகள் பாடுவதில் என்ன ஸ்ரத்தை காட்டுவாரோ அதே அற்பணிப்பு பூஜையின் போதும் இருக்கும். எப்பொழுதும் ’பளிச்’ – என்ற முகத்தோடு கூடிய சிரிப்பு நம்மை வரவேற்கும்.

பாடல் வகுப்புகள்

காலை 91/2 க்கு மேல் வித்யார்த்திகளுக்கு பாடல் வகுப்பு நடைபெறும். பகல் ஒரு மணி வரை வகுப்புகள் நடைபெறும். பிறகு சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் 31/2 மணிக்கு தயாராக நாற்காலியில் உட்கார்ந்து விடுவார். ஒரு சோம்பல் இருக்காது. எப்பொழுதும் உற்சாகமாகவே இருப்பார். அது போல் வகுப்புக்கு பாடல் சொல்லிக் கொடுக்கும் போது நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். நேரம் போவதே தெரியாது. அவர் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டே நான் கற்றுக் கொண்ட பாடல்கள் பல உண்டு. ஒரு ராகத்தின் ஜீவனாக பிடிகளை மிகவும் அழுத்தமாக சொல்லித்தருவார். அதை மனதில் வாங்கிக் கொண்டாலே பாட்டு வந்து விடும். வித்யார்த்திகள் தவறாகப் பாடினால் அந்த பாடலின் சங்கதி நன்கு வரும் வரை மிகவும் பொறுமையாக சொல்லித் தருவார்.

தனிப்பட்ட குணம்

என் மகளின் திருமணம் ராஜா அண்ணாமலை புரத்தில் ஒரு மண்டபத்தில் மாடியில் நடந்தது. டிகேபி அவர்களுக்கு மாடி ஏற முடியாது என்பதால் வர இயலவில்லை. திருமணம் முடிந்தவுடன் சாப்பாட்டிற்கு முன்பே தம்பதிகள் அவரிடம் ஆசி பெற்றார்கள். அவர் ஆசிர்வாதம் செய்வதை – அதன் அழகை 4, 5 பக்கங்களுக்கு வர்ணிக்கலாம். யாருக்கு என்ன தேவை என்றறிருந்து அது அவர்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்க வாய் நிறைய மனம் குளிர வாழ்த்துவார். அதில் யாருக்கும் பாரபஷம் பார்க்க மாட்டார்.

மாலை கச்சேரிகளுக்கு அவரின் வயது காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டது. அப்பொழுது கூட” லலிதா போறயாம்மா? என்ன புடவை கட்டிக் கொள்ள போறே? கட்டிண்டு வந்து என்னிடம் காட்டிவிட்டு போ” - என்பார். இவர் கட்டிகொண்டு வந்து காண்பித்தால் –” நன்னா இருக்கும்மா கழுத்துக்கு நெக்லஸ் போட்டுக்கோ” என்று சொல்லி அழகு பார்த்துதான் அனுப்புவார். அந்த அளவு பாசமும், நேசமும் கொண்டவர். லலிதா இல்லாமல் அவர் ஒரு நாள் கூட இருந்ததில்லை.

எளிமை

ஒரு நல்ல மனுஷியை, அந்த மகத்தான விதூஹியை பார்க்க வியப்பாக இருக்கும். ’பத்ம விபூஷன்’ – ’இசை பேரறிஞர்’ – ’ஸ்ங்கீத கலாநிதி’ – என்ற உயர்ந்த பல விருதுகளை பெற்றவர். ஆனால் எளிமையானவர். அடக்கம், பெருந்தன்மை, தன்னம்பிக்கை – என்று அவரின் பண்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

வயது வித்தியாசம் பார்க்காமல் ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களை சொல்லி மகிழ்வார். யார் வந்து பாட சொல்லி கேட்டாலும் உடனே பாடிக்காட்டுவார். அது ஸங்கீதம் தெரிந்தவராகவும் இருக்கலாம், வீடுகளில் வேலை செய்பவராகவோ, அல்லது தென்னம் ஓலையில் கூடை பின்னுபவராகவோ இருந்தாலும் பாட சொல்லி கேட்டு விட்டால் Music Academy யில் பாடுவது மாதிரி சங்கதிகளோடு பாடிக்காட்டுவார்.

குழந்தைகளுக்கு அல்லது வீட்டில் யாருக்காவது உடம்பு சரி இல்லாமல் இருந்தாலும் அவரது பிரார்த்தனை ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும். தள்ளாத வயதில், நடக்க முடியாமல் போன போது வீல் சேரில் தான் உட்காருவார். இரவு தூங்கப் போகும் போது வீல் சேரில் படுக்கை அறைக்கு செல்லும் பொழுது சுவற்றிலும், மேஜைகளிலும் கடவுள் படங்கள் மிகுந்து இருக்கும். அப்பொழுது வீல் சேரில் இருந்தபடியே, எல்லா தெய்வதித்திடமும் தோத்திரங்களை சொல்லி வணங்குவார். அதோடு மட்டுமல்லாமல் அன்று வீட்டிற்கு வந்து போனவர்கள் தொடங்கி உலக(நன்மைக்கான) சமாதானத்திற்கான பிரார்த்தனையாகவும் அது அமையும். இது அவரின் தேச பக்தியை நமக்கு தெள்ளத் தெளிய தெரியப்படுத்தும்.

இப்படி நிறைகுடமாக நம்முடன் இருந்து பழகியவர் அவரை பார்த்தாலே நம் மனம் மகிழும்.இத்தனை பெருமை வாய்ந்த மஹா மனுஷி வாழ்ந்த கால கட்டத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்ற சந்தோஷம் ஒன்றே நமக்கு போதும். இதை விட வேறு பாக்கியம் நமக்கு என்ன இருக்க முடியும்.

-சாத்தூர் ஜி.எஸ். கற்பகம்