கருத்துக்கள்:

புதிதாக ஓர் பாடலை எடுத்து பாடும் சமயம் இந்த பாட்டிற்கு இந்த காலபிரமாணம் தான் உகந்ததாக இருக்கும் என்று அவர் வாசிக்கும் போதே தெரிந்து விடுமாம். அத்தனை அழகாக இருக்குமாம் அப்பாவின் வாசிப்பு. ” கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்த மாதிரி – இவர் – மிருதங்கத்தோடு பிறந்திருகிறார்.என்ன வாசிப்பு! அடடா!! “ என்று மனம் நெகிழ்ந்து சொல்வார்.

ஒரு நெருடலான கோர்வையைக் கூட, ஒரு சின்னக் குழந்தையைத் தூக்குவது மாதிரி மிகவும் லாவகமாக வாசித்து விடுவாராம். அவ்வளவு மென்மையாக, அல்வா மாதிரி, அதே சமயம் ஆணித்தரமான கோர்வைகளாகவும் இருக்குமாம்.

இவ்வளவு நெருடலான ஒரு கோர்வைக்கு எப்படி நாம் மிகவும் எளிதாக தாளம் போட்டோம் என்று நினைக்கும் போதுதான், அவரின் வாசிப்பின் தனித்தன்மை நம்மை பிரமிக்க வைக்கும். – என்று டிகேபி அடிக்கடி சொல்வார்.

”பொதுவாக அவர் வாசிக்கிறார் என்றால் எனக்கு பயமே இல்லேம்மா, என் கூடவே பாடுவது மாதிரி – மிருதங்கத்தை என் பாட்டிற்குத் துணையாகக் கொண்டு வருவார்” என்றும் சொல்வார்.

ஒரு புதிய கீர்த்தனை நான் பாடினாலும், நெடுநாள் வாசித்து பழக்கப் பட்டவர் போல் அந்த பாடலை அப்படியே வாங்கி வாசிப்பது நன்றாக இருக்கும். அப்படி ஒரு சுகமான வாசிப்பை – அவர் அன்றி அனுபவித்து வாசிப்பவர் யாரும் இல்லை. அப்படி ஒருவர் இனிமேல் பிறந்தால் தான் உண்டு. அப்படி ஒரு அபூர்வப்பிறவிம்மா – என்று டிகேபி – அவர்கள் சொல்வார்.

பொதுவாக எப்பொழுதும் டிகேபி அவர்கள் கச்சேரிகளுக்கு Flask ல் வென்னீர் கொண்டு செல்ல மாட்டாராம். எந்த ஊரில், என்ன குடிநீர் கிடைக்கிறதோ அதையே குடித்து விடுவாராம். பின் நாளில் மணி அய்யர் தான் குரல் சேதப்படாமல் இருக்க வீட்டில் இருந்து தான் வென்னீர் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லி நல்ல குடிநீர் குடிக்கச் செய்தார் என்றும் கூறுவார்.

ஒரு கச்சேரி சமயம் அம்மாவுக்கு 102 டிகிறி காய்ச்சல். அதனுடன் தான் கச்சேரி செய்தாராம். கச்சேரி படு அமர்க்களமாக, படுஜோராக அமைந்ததாம். மங்களம் பாடி கச்சேரி முடிந்ததும் அம்மாவால் எழுந்திருக்க முடியவில்லையாம். எப்பொழுதும் கச்சேரி முடிந்தவுடன் யாருக்கும் காத்திடாமல் பறந்துவிடும் மணி அய்யர் அன்று அம்மாவைப் பார்த்துவிட்டு “என்ன உடம்பு சரி இல்லையா? ஏதோ சிரமப் படுவது மாதிரி தெரிகிறதே” என்று அனுதாபத்தோடு கேட்டாராம். அதற்கு அம்மாவும் ஆமாம் கொஞ்சம் தலை சுற்றுகிறது என்று சொன்ன பிறகு – அம்மா தன்னை சுதாரித்துக் கொள்ளும் வரை கூடவே இருந்து வழி அனுப்பி வைத்தாராம். இது மேடையில் இருந்த யாருக்குமே தெரியாது. ஆனால் அவர் மட்டும் நான் சோர்வாக இருப்பதை புரிந்து கொண்டு, ஒத்தாசையாக இருந்ததை மறக்கவே முடியாதும்மா – என்று சொல்வார்.

அப்பாவுக்கு காபி மிகவும் பிடிக்கும். காபி இருந்தால் போதும். சாப்பாடு கூட வேண்டாம். ரயில் பிரயாணங்களில் காபி கொண்டு வரச்சொல்வார். அது நல்ல சூடாக இல்லை என்றால் மீண்டும் வரவழைத்து பார்ப்பார். எத்தனை முறை கேட்டாலும் ஏற்கனவே இருக்கும் காபி யைத்தானே அவன் தருவான். எனவே ”காபி சூடாக இல்லை என்றால், என்ன கொஞ்சம் கூட ஞானமே இல்லை” என்று காபி போடுபவனைக் கூட ஸ்ங்கீத மொழியிலேயே திட்டுவார் என்று அம்மா எப்பொழுதும் நினைவு கொள்வார்.

- லலிதா சிவகுமார்.