மிருதங்கத்துக்கு ஒரு மணி அய்யரும்
பல்லவிக்கு ஒரு பட்டம்மாளும்
எனதருமை தகப்பனார் மிருதங்க சக்ரவர்த்தி லயமாமணி திரு. பாலக்காடு மணி அய்யர் அவர்கள், வீட்டில் அடிக்கடி சங்கீத சம்பந்தப்பட்ட ருசிகரமான விஷயங்களையும், தான் வாசித்து பழகிய வித்வான்களைப் பற்றி விஷேசமான அம்சங்களைப் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருப்பார். அந்த விதத்தில் அடிக்கடி அவருக்கு பிடித்த டிகேபி அம்மாவின் சங்கீதத்தை பற்றி மிகவும் சிலாகித்து பேசுவார். அவர் எவ்வளவோ பேசி இருந்தாலும் என் நினைவில் அழியாது நிற்கும் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் கச்சேரி செய்வது என்பது மிக மிக குறைவு. அப்படி இருந்தாலும் ஒரு தேர்ந்த வித்வானுக்கு சரி சமமாக எந்த வித குறையுமின்றி பரிமளிக்கும் ஒரு நிறைவான சங்கீதம் அவருடையது என்றும் சொல்லுவார். ”ஆனாலும் எப்படி ஒரு நிர்ணயமான பாடாந்தரம், ஒரு பெண் பாடுவது (குறுகிய வட்டத்தில் இல்லாது) ஆண்களுக்குச் சமமாக, ஒரு ஆளுமைத் திறனோடு, ’மெஜஸ்டிக்’ காக வந்து என்னமாகப் பாடுகிறார். அவர் பாடுவதற்கு நான் வாசிப்பது ரொம்பஉற்சாகமாக இருக்கும். முக்கியமாக அந்த காலப்பிரமாணம் அரியக்குடிகே உரித்தான (ஸங்கீத மொழியில் சொல்லப்படும் ரெண்டாங்கட்டான் காலப்பிரமாணம்) மிகவும் உயர்ந்த (High) ஸ்ருதி இல்லை, அதற்காக ‘தக்கு’ – ஸ்ருதியும் இல்லாது இருப்பதே வாசிப்புக்கு அழகு சேர்க்கும். என் மிருதங்கத்திற்கு, என் வாசிப்புக்கு சௌகர்யமான ஸ்ருதியாக இருப்பதனால் எனக்கு, அவருக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும்” என்பார்.
- லலிதா சிவகுமார்.